திருகோணமலை மாவட்டத்தின் தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப (ICT) துறையுடன் தொடர்புடைய மாணவர்கள், தொழில் வல்லுநர்கள், துறைசார் நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்களை ஒருங்கிணைக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்ட Trincomalee Tech Hub நேற்று (14.06.2026) உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
திருகோணமலையில் தகவல் தொழில்நுட்பத் துறையுடன் தொடர்புடைய வளங்கள், திறமைகள் மற்றும் வாய்ப்புகளை இணைப்பதில் நீண்டகாலமாக நிலவி வந்த இடைவெளியைக் குறைத்து, அறிவுப் பகிர்வு, திறன் விருத்தி, தொழில்முறை முன்னேற்றம் மற்றும் புதுமைகளை ஊக்குவிக்கும் வலுவான தொழில்நுட்ப சமூகத்தை உருவாக்குவதே இந்த முயற்சியின் பிரதான நோக்கமாகும்.
இதன் தொடக்க நிகழ்வாக நடைபெற்ற Inauguration Meetup நிகழ்வில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தொழில்நுட்ப ஆர்வலர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பட்டதாரிகள், தொழில் வல்லுநர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் 35-க்கும் மேற்பட்டோர் நேரடியாக (Physical Participation) பங்கேற்றதுடன், 25-க்கும் மேற்பட்டோர் இணையவழி (Virtual Participation) மூலமும் இணைந்து இந்த வரலாற்று சிறப்புமிக்க தொடக்க நிகழ்விற்கு ஆதரவு வழங்கினர்.
மேலும், Trincomalee Tech Hub சமூகத்தில் ஏற்கனவே 380-க்கும் அதிகமான தொழில்நுட்ப ஆர்வலர்கள் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த வளர்ச்சி, மாவட்டத்தில் தொழில்நுட்பத் துறையை முன்னேற்றுவதற்கான ஒருங்கிணைந்த சமூகத்தின் தேவை மற்றும் ஆர்வத்தை வெளிப்படுத்துவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Trincomalee Tech Hub மூலம் எதிர்காலத்தில் தொழில்நுட்பப் பயிற்சிகள், அறிவுப் பகிர்வு அமர்வுகள், தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சிகள், திறன் மேம்பாட்டு திட்டங்கள், தொழில்முனைவு ஊக்குவிப்பு நடவடிக்கைகள், புதுமை மற்றும் ஆராய்ச்சி சார்ந்த செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலையை தொழில்நுட்ப திறன்கள், புதுமைகள் மற்றும் டிஜிட்டல் மாற்றங்களின் முன்னணி மையமாக உருவாக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த முயற்சியில் தொழில்நுட்பத் துறையை நேசிக்கும் அனைவரும் இணைந்து பயணிக்குமாறு Trincomalee Tech Hub சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


