செம்மணி – சித்துபாத்தி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளில் சர்வதேச மேற்பார்வை மற்றும் நிபுணர்களின் ஈடுபாட்டை உறுதி செய்யுமாறு சர்வதேச சட்டவல்லுநர்கள் ஆணைக்குழு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
நேற்று (28.07.2025) வரை குறித்த மனித புதைகுழியிலிருந்து சிறுவர்களின் என்புக்கூடுகள் உட்பட 104 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், இது குறித்து விரிவான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சர்வதேச சட்டவல்லுநர்கள் ஆணைக்குழு இந்த அழ்வினை உண்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்கான ஒரு முக்கியமான படியாக விபரித்துள்ளது.
எனினும், அது சர்வதேச மனித உரிமைகள் தரநிலைகளுக்கு ஏற்ப, குறிப்பாக மினசோட்டா நெறிமுறைக்கு ஏற்ப நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை ஈடுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும், விசாரணை முழுவதும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் இந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
செம்மணி மற்றும் மன்னார் போன்ற பிற இடங்களில் முன்னர் தோல்வியுற்ற விசாரணைகளை மேற்கோள்காட்டி, மனிதப் புதைகுழிகள் தொடர்பான விடயத்தை முறையாக விசாரிப்பதற்கு ஒரு தேசிய சட்ட மற்றும் நிறுவன கட்டமைப்பு இல்லாததை சர்வதேச சட்டவல்லுநர்கள் ஆணைக்குழு விமர்சித்துள்ளது.
காணாமல் போனவர்கள் அலுவலகத்தின் அரசியல்மயமாக்கல் மற்றும் பயனற்ற தன்மை குறித்தும் அந்த ஆணைக்குழு கவலை தெரிவித்து, அதன் சுதந்திரத்தை உறுதிப்படுத்தவும் பாதிக்கப்பட்டவர்களுடன் அர்த்தமுள்ள வகையில் இணைந்து செயற்படவும் அழைப்பு விடுத்துள்ளது.
நீதியை உறுதி செய்வதற்காக, சர்வதேச சட்டவல்லுநர்கள் ஆணைக்குழு இலங்கை அரசாங்கத்துக்கு சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.