வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட 53 தமிழ் அரசியல் கைதிகளின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (27) ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் நடைபெற்றது.
‘வெலிக்கடை சிறைப் படுகொலை’ நடைபெற்ற தினத்தை நினைவு கூர்ந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 04.30 மணிக்கு வெலிக்கடை தியாகிகள் அரங்கில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் திருகோணமலை கிளையின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நடைபெற்றது.
கறுப்பு ஜூலையின் ஓர் அங்கமாக வெலிக்கடை சிறை படுகொலை கடந்த 1983 ஜூலை 25, 28ஆம் திகதிகளில் நடைபெற்றது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளை அங்கிருந்த சிங்கள அரசியல் கைதிகள் சிறைக் காவலர்களின் ஆதரவுடன் வெட்டியும் குத்தியும் கொடூரமாகக் கொன்றனர். 25ஆம் திகதி 35 தமிழ் அரசியல் கைதிகளும் 28ஆம் திகதி 18 தமிழ் அரசியல் கைதிகளும் குரூரமாகக் கொல்லப்பட்டனர். இவ்வாறு கொல்லப்பட்ட 53 தமிழ் அரசியல் கைதிகளில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளான தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன் ஆகியோரும் அடங்குவர் என்பது நினைவுகூரத்தக்கது.