திருகோணமலை மூத்த எழுத்தாளர் திருமலை நவம் எழுதிய ‘இராவணன் கோட்டம்’ எனும் வரலாற்று மற்றும் தொல்லியல் ஆய்வு நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் சனிக்கிழமை (31) திருகோணமலையில் நடைபெறவுள்ளது.
திருகோணமலை தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்வு, காலை 9.30 மணிக்கு திருகோணமலை மாநகர சபை மன்றக் கேட்போர் கூடத்தில், சங்கத்தின் தலைவர் கவிஞர் க. யோகானந்தன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் அருளுரையாளர்களாக திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் பிரதம குரு வேதாகமமாமணி சோ. இரவிச்சந்திரக்குருக்கள் மற்றும் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் கலாநிதி கிரிஸ்பியன் நோயல் இம்மானுவேல் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
முதன்மை அழைப்பாளராக கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் நா. மணிவண்ணனும், மேன்மை அழைப்பாளராக பிரபல தொல்லியல் ஆய்வாளரும் ஐ.பி.சி. தமிழ் ஊடகத்தின் நிறுவனருமான க. பாஸ்கரனும் பங்கேற்கவுள்ளனர்.
மேலும், விசேட அழைப்பாளராக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் துரைமனோகரனும், கௌரவ அழைப்பாளர்களாக எழுத்தாளரும் ஆசிரியருமான எஸ்.ஆர். தனபாலசிங்கமும் கலந்துகொள்ளவுள்ளனர்.
நிகழ்வின் வரவேற்புரையை சிரேஷ்ட ஊடகவியலாளர் அ. அச்சுதன் நிகழ்த்தவுள்ளதுடன், நூல் அறிமுகத்தை சட்டத்தரணி திருமதி உதயகுமார் பிரசாந்தினியும், ஆய்வுரையை பேராசிரியர் வ. குணபாலசிங்கமும் வழங்கவுள்ளனர்.
நூல் வெளியீட்டுரையை மகுடம் வி. மைக்கல் கொலின் நிகழ்த்தவுள்ளதுடன், நன்றியுரையை திருகோணமலை தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் திருமலை சி. காண்டீபன் வழங்கவுள்ளார். நிகழ்ச்சித் தொகுப்பினை கல்யாணி நவநேசன் மேற்கொள்ளவுள்ளார்.
திருகோணமலையின் வரலாறு, தொல்லியல் மற்றும் பண்பாட்டு மரபுகள் தொடர்பான ஆய்வுப் பதிவாக அமையும் இந்நூலின் வெளியீட்டு விழாவில் இலக்கிய ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

