சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையர் சிவராசா அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்கப்பட்டு, அவரது உயிரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, திருகோணமலை மாவட்ட இளைஞர்கள் இன்று (20.09.2026) மாலை திருகோணமலைக் கடற்கரை காந்தி சிலை முன்றலில் மெழுகுவர்த்தி ஏந்திய மனிதாபிமான ஒற்றுமை நிகழ்வை முன்னெடுத்தனர்.
இந்த நிகழ்வில் பங்கேற்ற இளைஞர்கள், மெழுகுவர்த்திகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் பிரார்த்தனை செய்து, சிவராசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டு அவர் பாதுகாப்பாக தாயகம் திரும்ப வேண்டும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.
மேலும், இலங்கை அரசாங்கம் இவ்விடயத்தில் அவசர கவனம் செலுத்தி, சவூதி அரேபிய அரசாங்கத்துடன் உரிய ராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து, மனிதாபிமான அடிப்படையில் சாதகமான தீர்வை ஏற்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
நிகழ்வில் உரையாற்றிய பங்கேற்பாளர்கள், இது நீதிமன்றத் தீர்ப்பை மாற்ற வலியுறுத்தும் அரசியல் போராட்டமோ அல்லது எதிர்ப்பு ஆர்ப்பாட்டமோ அல்ல என்றும், உயிர்ப்போராட்டத்தில் இருக்கும் ஒரு சக மனிதனுக்காகவும், தனது மகனின் உயிரைக் காக்க ஏங்கும் ஒரு தாயின் துயரத்தில் பங்கெடுக்கும் மனிதநேய வெளிப்பாடாகவும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
“எங்களால் இயன்ற மனிதாபிமான ஆதரவை வெளிப்படுத்துவதும், இறைவனிடம் அவரது உயிர் காக்கப்பட வேண்டும் என பிரார்த்திப்பதும் மட்டுமே எமது நோக்கம். இது ஒரு மன்றாட்டு, ஒரு தொழுகை, ஒரு நம்பிக்கையின் வெளிப்பாடு,” என அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்த மனிதாபிமான ஒற்றுமை நிகழ்வில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு, சிவராசா அனோஜனின் குடும்பத்தினருக்கு தங்களது ஆதரவையும் ஆறுதலையும் தெரிவித்ததுடன், அவரது உயிரைக் காப்பாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளும் வெற்றியடைய வேண்டும் என பிரார்த்தனை செய்தனர்.


