திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தை நவீனமயமாக்கும் நோக்கில், அதற்கான திட்டத்தைத் தயாரிப்பதற்காக நேற்று (23) பூர்வாங்க ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. ரொஷான் அக்மீமன, திருகோணமலை மாநகர சபை மேயர் திரு. கந்தசாமி செல்வராஜா, மற்றும் மாநகர சபை ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாக மத்திய பேருந்து நிலையத்திற்குச் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டனர்.
ஆய்வின் போது, பேருந்து நிலையத்தின் பராமரிப்பு, உட்கட்டமைப்பு வசதிகள், பயணிகளுக்கான சேவைகள் மற்றும் பொது சுகாதார வசதிகள் தொடர்பாக பல்வேறு குறைபாடுகள் மற்றும் சவால்கள் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு, பயணிகளுக்கு பாதுகாப்பானதும் வசதியானதுமான சேவையை வழங்கக்கூடிய வகையில் பேருந்து நிலையத்தை நவீனமயமாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தின் அபிவிருத்தி மற்றும் நவீனமயமாக்கலுக்காக முன்னெடுக்கப்படும் இந்த முக்கிய முயற்சிக்கு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. ரொஷான் அக்மீமன, திருகோணமலை மாநகர சபை, மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தங்களது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.
இந்தத் திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம், திருகோணமலை நகரின் போக்குவரத்து சேவைகள் மேலும் மேம்படுவதோடு, தினசரி ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு சிறந்த வசதிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

