Trinco Mirror
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Listen Live
Font ResizerAa
Trinco Mirror
Listen
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • திருக்கோணமலை
    • உலகம்
    • ஆய்வுக் கட்டுரை
    • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • அமைப்புகள்
Follow US

உயிர்த்த ஞாயிறு அனர்த்தம்: இந்த அரசாங்கத்தின் மீது அழுத்தம் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது சபையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி

சித்திரை 12, 2026
இலங்கை
படிக்க 5 நிமிடங்கள்
SHARE

​முக்கியமான வழக்குகளில் நிச்சயமாக சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் வந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறான வழக்கில் ஏன் அந்த ஒத்துழைப்பு வழங்கப்படுவதில்லை என்பது ஒரு பெரிய கேள்வி.எனவேதான், இந்த அரசாங்கத்தின் மீதும் ஏதேனும் அழுத்தம் இருக்கிறதா என்ற சந்தேகம் எமக்கு எழுகிறது என பாராளுமன்றத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் பற்றிய விவாதத்தில் உரையாற்றும் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (09), நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளைப் பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.

கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ,முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அங்கு மேலும் தெரிவித்ததாவது,

“கௌரவ தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே, நான் உரிய விடயதானம் தொடர்பாகப் பேசுவதற்கு முன்னர் , ஆளுங்கட்சி அமைச்சர்கள் இருவர் முன்வரிசையில் அமர்ந்திருப்பதால் அவர்களூடாக அரசாங்கத்திற்கு ஒரு கோரிக்கையை விடுக்க விரும்புகிறேன்.

இப்போது மத்திய கிழக்கில் போர்ச் சூழல் ஓரளவிற்குத் தணிந்து, போர்நிறுத்தத்திற்குச் சென்றுள்ள சந்தர்ப்பத்தில், ஈரானியக் கப்பலில் இருந்து காப்பாற்றப்பட்ட இளம் மாலுமிகள் சிலர் நாட்டில் இருக்கிறார்கள். அவர்களை உடனடியாக ஈரானுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன்.

இது குறித்து மீண்டும் ஒருமுறை அமெரிக்காவிடம் போய் கேட்காமல், நீங்கள் நடுநிலையானவர்கள் என்றால், காயமடைந்த மற்றும் காப்பாற்றப்பட்ட அந்த இளம் மாலுமிகளை ஈரானுக்குத் திருப்பி அனுப்ப தயவு செய்து நடவடிக்கை எடுங்கள். அவர்கள் இளம் பயிற்சி மாணவர்கள் (Cadets), எனவே இந்த போர்நிறுத்தக் காலத்திலேயே அவர்களை ஈரானுக்குத் திருப்பி அனுப்புவது நமது கடமையாகும். இரண்டு வாரங்களுக்குப் பிறகு டொனால்ட் ட்ரம்ப் சொன்னால் என்ன நடக்கும் என்பது எங்களுக்குத் தெரியாது.

​ சில விமானங்களை மத்தளையில் தரையிறக்க அமெரிக்கர்கள் கேட்டதாக ஜனாதிபதி ஒரு பெரிய பொய்யைக் கூறி, நமது துறைமுகங்களுக்கு கப்பல் வருவதைத் தாமதப்படுத்துவதைத் தவிர்த்தார்.அதனால் தான் இறுதியாக அந்த கப்பல் அழிக்கப்பட நேர்ந்தது. இறுதியில் அமெரிக்கா அந்த கப்பலைத் தாக்குவதற்கு நாம் வழிவகுத்தோம்.

​நாம் நடுநிலையானவர்கள் என்று உரிமை கோரினோம், ஆனால், உண்மையில் நமது செயல்பாடுகள் உண்மையான நடுநிலையைக் காட்டவில்லை. ஆகையால், குறைந்தபட்சம் இந்த இக்கட்டான தருணத்திலாவது, அந்த இளம் மாணவர்களை இந்த போர்நிறுத்தக் காலத்திலேயே உடனடியாக ஈரானுக்குத் திருப்பி அனுப்புமாறு நான் அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறேன்.

​இப்போது உரிய விடயத்திற்கு வருகிறேன்.உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்து பேசும்போது நான் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது என்னவென்றால், குறிப்பாக ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகிய உயர் பொலிஸ் அதிகாரிகள் மீது எமக்கு முழுமையான நம்பிக்கை இருக்கிறது.

​அந்த நம்பிக்கையின் அடிப்படையில், இந்த விசாரணையில் புதிய திசையில் செல்லும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.அந்த அதிகாரிகள் இருவருக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை

இது குறித்து இப்போது அமைச்சர் சில விடயங்களை விளக்கினார். ஆனால், சில நாட்களுக்கு முன்னர் நீதவான் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கைது செய்யப்பட்டுள்ள புலனாய்வுத் துறை அதிகாரி சுரேஷ் சாலேயின் பிரஸ்தாப பிணை மனுவின் போது சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து யாரும் அங்கு சமுகமளித்திருக்கவில்லை.அதனால்,நீதவான் கேட்ட கேள்விகளுக்கு இந்த குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் பதிலளிக்க முடியாமல் போனதை நாம் கண்டோம்.நீதியமைச்சரும் இங்கு இருக்கிறீர்கள்.

​இவ்வாறான முக்கியமான வழக்குகளில் நிச்சயமாக சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் வந்து ஒத்துழைப்பு வழங்கியிருக்க வேண்டும். ஏன் அந்த ஒத்துழைப்பு வழங்கப்படுவதில்லை என்பது ஒரு பெரிய கேள்வி.எனவேதான் இந்த அரசாங்கத்தின் மீதும் ஏதேனும் அழுத்தம் இருக்கிறதா என்ற சந்தேகம் எமக்கு எழுகிறது. எனவே அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு நாம் கோரிக்கை விடுக்கிறோம்.

இந்தச் சம்பவம் குறித்து நாங்கள் தொடர்ந்து ஆராயும் போது பல விடயங்களைக் காண்கிறோம். குறிப்பாக, இப்போது ஒரு முக்கியமான சாட்சியாக சஹ்ரானின் மனைவி ஹாதியாவை முன்வைக்க முடியும். ஆனால் அவர் சாட்சியம் அளிக்க முற்பட்டபோது சட்டமா அதிபர் திணைக்களம் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. ஏன், இந்த எதிர்ப்பு?

ஆனால் இறுதியில் ஆணைக்குழுவின் தலைவரின் முடிவின்படி அந்த சாட்சியம் இரகசியமாகப் பதிவு செய்யப்பட்டது. அது இப்போது அறிக்கையில் உள்ளது.
​ஆனால் அவற்றைப் பார்க்கும்போது, ஹாதியாவை ஒரு குற்றவாளியாகக் கருதி அவர் மீது இப்போது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வழக்குத் தாக்கலைத் தவிர்த்து அவரை ஒரு சாட்சியாக வைத்திருந்தால், இந்த வழக்கு மூலம் இன்னும் பல விடயங்களை நிரூபித்திருக்க முடியும்.

அது மட்டுமல்ல, ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பாக இருந்த காலத்திலேயே தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளில் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, அஹ்னாப் ஜஸீம், அஸாத் ஸாலி மற்றும் டொக்டர் ஷாபி தவிர்ந்த ஏனைய அனைத்து வழக்குகளுக்கும் ஷானியின் காலத்தில் பெறப்பட்ட சாட்சியங்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. அதன் பின்னர் ஒன்றும் நடக்கவில்லை.
​. எனவே இந்த விடயத்தை முன்னெடுத்துச் செல்லும்போது இன்னும் பல விடயங்கள் வெளிவருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

​குறிப்பாக, சஹ்ரான் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு அருகிலுள்ள அடுத்த அறையில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் மூவர், இந்த குண்டுவெடிப்புக்கு பின்னர் ஹோட்டலுக்குச் சொல்லாமல் நேரடியாகத் தமது நாட்டுக்குச் சென்று, அங்கிருந்து ஹோட்டல் முகாமையாளருக்குத் தொலைபேசி அழைப்பு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். இந்த மூவரும் ஏன் அங்கு இருந்தார்கள்? நாட்டை விட்டு ஏன் அவ்வாறு வெளியேறினார்கள்?
​அது குறித்து இன்னும் தேடப்படவில்லை. அது குறித்து தேடிப் பார்க்க வேண்டும். அது மட்டுமல்லாது, இன்னும் பல சம்பவங்கள் உள்ளன.

​குறிப்பாக,வவுணதீவு சம்பவம் மற்றும் ஆசாத் மௌலானாவின் அந்த சனல் 4 அலைவரிசைச் சம்பவத்திற்குப் பின்னர், இப்போது ஆசாத் மௌலானாவின் சாட்சியத்தைப் பதிவு செய்ய வேண்டிய தேவை உள்ளது.
​அதற்குத் தேவையான சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
​மேலும் சாட்சிகள் பாதுகாப்புச் சட்டம் (Protection of Witnesses Act) உள்ளது. எனவே இந்த ஏற்பாட்டைப் பயன்படுத்தி ஆசாத் மௌலானாவின் சாட்சியத்தைத் தொலைதூரத்தில் இருந்தேனும் (Remotely) பதிவு செய்ய முடியும்.
​இந்த முழு விசாரணையும் சரியான திசையில் செல்வதற்கு இது மிக விரைவாகச் செய்யப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஆகையால்தான் இந்த விடயங்களை நாம் முன்வைக்கிறோம்.

​இதனுடன், இதுவரை கடமையாற்றிய இந்த அதிகாரிகளுக்கு அரசாங்கத்தினால், குறிப்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
​இதன் மூலம் இந்த விசாரணையின் ஊடாக இறுதியாக இந்தச் சம்பவத்தின் உண்மையான மூளை யாகச் செயற்பட்ட நபரைக் கண்டறிய முடியும். நன்றி” என்றார்.

Your Ad Here
Place your ads on our website

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்
AdvertisementSidebar Ad 2

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் ! திறக்கப்பட்டுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள்

ஆவணி 10, 2025
இலங்கைஉலகம்

இலங்கை ஜனாதிபதி மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி தூதுவர் இடையே கலந்துரையாடல்!

ஆடி 26, 2025
இலங்கை

பிரிட்டன் எம்.பிக்கள் குழு இலங்கைக்கு விஜயம்

ஆடி 27, 2025
இலங்கைதிருக்கோணமலை

திருகோணமலை பொது வைத்தியசாலையில் சுகாதார அமைச்சரின் வருகையை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்டம்

புரட்டாதி 6, 2025
Trinco MirrorTrinco Mirror
Follow US
© 2025 Trinco Mirror Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • நிகழ்வுகள்
  • ஆவணங்கள்
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?