திருகோணமலை நகரப்பகுதியின் உடைச் சந்தையில் ஆரோக்கியமான போட்டித்தன்மை இல்லாமையினால் பொதுமக்கள் பெரும் பொருளாதாரச் சுமைகளை எதிர்கொண்டுள்ளதாகவும், இது குறித்து மாநகர சபை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் திருகோணமலை மாவட்ட வர்த்தக சங்கம் (Trincomalee District Business Council – TDBC) வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து வர்த்தக சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
ஊடக அறிக்கை (Media Statement)
திருகோணமலையில் வியாபாரச் சந்தையில் ஆரோக்கியமான போட்டி இல்லாத நிலை குறித்து பொதுமக்கள் மத்தியில் தீவிரமான கவலை நிலவுகிறது. வியாபாரத்தில் போட்டி நிலவினால்தான் நுகர்வோருக்கு நியாயமான விலையில் தரமான பொருட்கள் கிடைக்கும் என்பது அடிப்படை பொருளாதார உண்மையாகும். இதனை மாநகர சபை கவனத்தில் கொள்ள வேண்டும்.
தற்போது திருகோணமலையில் புடவைகள் உள்ளிட்ட உடைச் சந்தையில் உள்ளகமாக price fixing (விலை நிர்ணய ஒப்பந்தம்) நடைமுறைப்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் அதிக விலைக்கு பொருட்களை வாங்க வேண்டிய நிலை உருவாகி, பலர் கொள்வனவுகளைத் தவிர்த்து வருகின்றனர்.
மட்டக்களப்பு, கல்முனை, அக்கரைப்பற்று போன்ற பகுதிகளில் வியாபாரிகள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டு விலைக்குறைப்பு வழங்குவதன் மூலம் நுகர்வோருக்கு நன்மை அளிக்கின்றனர். ஆனால் திருகோணமலையில் சில வியாபாரிகள் ஒற்றுமை என்ற பெயரில் ஒரே விலையை நிர்ணயித்து அதிக விலையில் விற்பனை செய்வது நுகர்வோருக்கு, குறிப்பாக பாமர மற்றும் நடுத்தர மக்களுக்கு, கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
ஒரு சிறிய குழு வியாபார சங்கம் என்ற போர்வையில் மாநகர சபையை அச்சுறுத்தவோ, சந்தை முறையை கட்டுப்படுத்தவோ முடியாது. சட்டப்படி கட்டணங்கள் செலுத்தி, விதிமுறைகளை பூர்த்தி செய்பவர்களுக்கு யார் வேண்டுமானாலும் சுதந்திரமாக வியாபாரம் செய்ய மாநகர சபை ஊக்குவிக்க வேண்டும். இதுவே நியாயமான சந்தை அமைப்பையும் நுகர்வோர் நலனையும் பாதுகாக்கும்.
பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ஆரோக்கியமான வர்த்தகப் போட்டி நிலவும் போது மட்டுமே தரமான பொருட்கள் நியாயமான விலையில் கிடைக்கும் என்பது பொருளாதார உண்மையாகும். எனவே, நுகர்வோர் நலனை முன்னிறுத்தி, திருகோணமலை மாநகர சபை இந்த விவகாரத்தில் தலையிட்டு ஒரு வெளிப்படையான சந்தை சூழலை உருவாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.
திருகோணமலை மாவட்ட வர்த்தக சங்கம் (TDBC)

