திருகோணமலை மாவட்டத்தில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறையினை இல்லாது ஒழிக்கும் இளைஞர் படையணி, நேற்று (20) குச்சவெளி பிரதேச பிரிவிற்குட்பட்ட திரியாய், கும்புறுபிட்டி, நாவற்சோலை ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுத்தது.
இதன் ஒரு பகுதியாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கிணறுகளுக்கு குளோரின் இடும் பணி மேற்கொள்ளப்பட்டதுடன், வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு டெங்கு மற்றும் எலிக்காச்சல் தொடர்பான விழிப்புணர்வும் வழங்கப்பட்டது. அதே நேரத்தில், சுற்றுச்சூழல் அவதானிக்கப்பட்டு, டெங்கு பரவும் சூழலை அழிக்கும் வகையில் தேவையான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.
அனர்த்தத்திற்கு பின்னர் ஏற்படக்கூடிய இரண்டாம் நிலை அனர்த்தங்களை குறைக்கும் நோக்குடன் இச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இந்நிகழ்வுக்கு குச்சவெளி பிரதேச செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட கிராம சேவகர்கள் முழுமையான ஆதரவை வழங்கினர்.
மேலும், குச்சவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினைச் சேர்ந்த பொது சுகாதார வைத்திய அதிகாரிகள், இளைஞர் படையணிக்கு தேவையான பயிற்சிகளையும், விழிப்புணர்வு செயற்பாடுகளுக்கான வழிகாட்டல்களையும் வழங்கினர்.

இச்செயற்திட்டத்திற்கு ChildFund Sri Lanka நிதி ஆதரவு வழங்கியதுடன், Child Development Fund வழிகாட்டல் மற்றும் தொழில்நுட்ப அறிவு சார்ந்த உதவிகளை வழங்கியது.
காலத்துக்கேற்ப சமூகப் பொறுப்புடன் செயற்பட்டு, மக்களின் சுகாதார பாதுகாப்பிற்கு முன்நின்று செயல் பட்ட இளைஞர்களை, அந்தப் பகுதிகளிலுள்ள பொதுமக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

