திருகோணமலை ரோட்டரி கழகத்தின் 47வது தலைவராக ரோட்டேரியன் க. பிரபாகரன் அவர்களின் பதவியேற்பு விழா 2025 ஆகஸ்ட், 10 ஞாயிற்றுக்கிழமை, திருகோணமலை டைக் வீதியிலுள்ள ரோட்டரி அலுவலகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் முன்னாள் மாவட்ட ஆளுநர் RRFC PDG கௌரி ராஜன் அவர்கள் பிரதம விருந்தினராகவும், லங்கா ஐ.ஓ.சி. மூத்த துணைத் தலைவர் திரு. நவீன் குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர். திருகோணமலை மற்றும் கிளிநொச்சி ரோட்டேரியர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், ரோட்டாரக்டர்கள், இண்டராக்டர்கள், ரோட்டேரியர்களின் துணைவியர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
உடனடி முன்னாள் தலைவர் (IPP) றொட்டேரியன். சி. ஜெகதீஸ்வரன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தி, 2024–2025 ஆண்டின் வெற்றிகரமான பணிக்காலத்தை நினைவுகூர்ந்து, தன்னுடன் பணியாற்றிய குழு உறுப்பினர்களுக்கு தனது நன்றியை தெரிவித்தார். உடனடி முன்னாள் செயலாளர் றொட்டேரியன். பி. ரவிச்சந்திரன் அவர்கள் கடந்த ஆண்டின் முக்கிய திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து சுருக்கமான அறிக்கையை வழங்கினார்.

நிகழ்வின் ஒரு பகுதியாக, திருகோணமலை சென். ஜோசப் கல்லூரிக்கு மேசைப்பந்தாட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன், 15 தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு மிதிவண்டிகளும் வழங்கப்பட்டன.
IPP. எஸ். ஜெகதீஸ்வரன் அவர்கள் புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் றொட்டேரியன். க. பிரபாகரனை வாழ்த்தி, கழகத்தை வழிநடத்த அவருக்கு வாழ்த்துக்களை வழங்கினார். பிரதம விருந்தினராக உரையாற்றிய PDG கௌரி ராஜன் அவர்கள், திருகோணமலை ரோட்டரி கழகம் பின்தங்கிய சமூகங்களுக்கு வழங்கி வரும் சிறப்பான சேவையை பாராட்டி, அப்பகுதி மக்களுக்கு அவசரத் தேவைகள் ஏற்பட்டால் உதவத் தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.

விழா, அடுத்த ஆண்டுக்கான தலைவராகத் செயற்படவுள்ள றொட்டேரியன் க.. அருள்வரதராஜா அவர்கள் நன்றியுரையாற்றியதன் மூலம் நிறைவடைந்தது. இதன் மூலம் தலைவர் பிரபாகரனின் தலைமையில் புதியதும் நம்பிக்கையூட்டுவதுமான ஒரு ரோட்டரி ஆண்டு தொடங்கியது.