இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களான பேராசிரியர் தையமுத்து தனராஜ், பேராசிரியர் பாத்திமா பர்சானா ஹனிபா மற்றும் கலாநிதி கெஹான் தினுக் குணதிலக்க ஆகியோர் இன்று செம்மணி மனிதப் புதைகுழிக்கு விஜயம் செய்து நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியை அவதானித்துள்ளனர்.
அவர்களுடன் யாழ்.பிராந்திய அலுவலகத்தின் இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் மற்றும் ஆணைக்குழுவின் ஏனைய அதிகாரிகளும் இணைந்துகொண்டனர். அவர்கள் புதைகுழி இடத்தின் கண்டுபிடிப்புகள் மற்றும் முன்னேற்றம் குறித்து தடயவியல் நிபுணர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.


யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மேற்கொள்ளப்படும் மனிதப் புதைகுழி கட்டம் இரண்டின் அகழ்வுப் பணிகள் இன்று 30வது நாளை எட்டியது . இன்றைய தினத்தில் மேலும் ஐந்து மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதன் மூலம் இதுவரை மொத்தமாக 135 எலும்புக்கூட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 126 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, அகழ்வின்போது மீட்க்கப்பட்ட உடைகள் மற்றும் பிற பொருட்கள், நாளை (ஆகஸ்ட் 5) செம்மணியில் உள்ள சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பொதுமக்கள் மற்றும் காணாமல் போனவர்கள் குடும்பத்தினருக்காக காட்சிப்படுத்தப்படும். இது, நீதிமன்ற விசாரணையின் ஒரு பகுதியாகும்.