நாட்டின் ஒரு சில பகுதிகளில் வெப்பமும் மேலும் சில பகுதிகளில் மழைகொண்ட வானிலையும் நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் சில பகுதிகளில் வெப்பமான வானிலை நிலவும்.
இதேவேளை நாளைய தினம் சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியமுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது
இந்நிலையில் சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 14ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.
அதற்கிணங்க நாளை (12) நண்பகல் 12.11 அளவில் ஆடியகுளம், வேப்பங்குளம், பதவிய மற்றும் குச்சவெளி ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.