டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட கந்தளாய் பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் அகம் மனிதாபிமான வள நிலையம் (AHRC) நிறுவனத்தினால் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன.
கந்தளாய் பிரதேச செயலகத்தில் கடந்த ஜூன் 8 ஆம் திகதி நடைபெற்ற இந்த நிகழ்வில், சூறாவளியால் பாதிக்கப்பட்ட 20 வீட்டுத்தோட்டப் பயனாளிகளும் 10 நன்னீர் மீன்பிடித் தொழிலாளர்களும் பயனடைந்தனர்.
இத்திட்டத்தின் கீழ், வீட்டுத்தோட்டப் பயனாளிகளுக்கு விவசாய மற்றும் வீட்டுத்தோட்ட நடவடிக்கைகளுக்குத் தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன், நன்னீர் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள பயனாளிகளுக்கு மீன்பிடி உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக தலா ரூபா 20,000 பெறுமதியான காசோலைகளும் கையளிக்கப்பட்டன.
டித்வா சூறாவளியின் தாக்கத்தால் வாழ்வாதார வழிமுறைகளை இழந்த குடும்பங்களின் பொருளாதார மீட்சியை வலுப்படுத்தும் நோக்கில் இவ்வுதவிகள் வழங்கப்பட்டதாக AHRC நிறுவனம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களின் நீடித்த வாழ்வாதார முன்னேற்றத்திற்காக எதிர்காலத்திலும் பல்வேறு உதவித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கந்தளாய் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கந்தளாய் உதவி பிரதேச செயலாளர், AHRC நிறுவனத்தின் பணிப்பாளர் திரு. கண்டுமணி லவகுசராசா, பிரதி பணிப்பாளர் திரு. அழகுராசன் மதன், நிறுவன உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும் சமூகத்தின் நிலையான முன்னேற்றத்தை உறுதிப்படுத்துவதற்கும் AHRC நிறுவனம் தொடர்ந்து செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்
.


