அண்மையில் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் வனவள பாதுகாப்பு திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டிருந்த 548.5 ஏக்கர் நிலம் விவசாய நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்பட்டுள்ளது. இது இந்த அரசின் ஆட்சியாலும், பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவின் முயற்சியாலுமே சாத்தியமானது என கூற முடியும். அத்துடன் இதற்காக பாடுபட்ட அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் பாடுபட்டிருந்தார்கள் எனவே அவர்களையும் மறந்துவிட முடியாது.
இருப்பினும் குச்சவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் 10432 ஏக்கர் நிலத்தை விடுவிக்குமாறு கோரப்பட்டு வந்த நிலையில் 548.5 ஏக்கர் நிலமே விடுவிக்கப்பட்டுள்ளது. என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில்
1. கள்ளம்பத்தை – புளியடிக்கண்டல் 175 ஏக்கர்
2. கள்ளம்பத்தை – கள்ளம்பத்தை வெளி 163 ஏக்கர்
3. காசீம் நகர் -இலந்தைகுளம் 135 ஏக்கர்
4. கும்புறுபிட்டி வடக்கு – மடுவாகுளம் 20 ஏக்கர்
5. கும்புறுபிட்டி வடக்கு – கல்லிப்பிளவு 17 ஏக்கர்
6. புல்மோட்டை 01 – பழையஇறக்கம் 20 ஏக்கர்
7. புல்மோட்டை 04 – சூதயன்நகர் 18.5 ஏக்கர்
ஆகிய பகுதிகளில் நிலங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. இதற்காக தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தன.
குறிப்பாக குச்சவெளி காணி அபகரிப்பு தொடர்பாகவும் ஏனைய இடங்களில் உள்ள காணி அபகரிப்பு தொடர்பாகவும் 19.05.20250 அன்று பிரதி அமைச்சர் என்னை மாவட்ட செயலகத்திற்கு அழைத்து அது தொடர்பான விடயங்களை கேட்டறிந்ததோடு குச்சவெளி மக்களுடனான கலந்துரையாடலுக்கும் ஏற்பாடு செய்யுமாறு கேட்டதற்கு இணங்க 26.05.2025 அன்று மாவட்ட செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மக்களுடனான சந்திப்பிலும் பிரதி அமைச்சர் உள்ளிட்ட பல அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் தொடர் நடவடிக்கையின் மூலம் குறிப்பிட்ட நிலங்கள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளன.
திருகோணமலை மாவட்டத்தில் யுத்தம் நிறைவுற்றதற்கு பின்னர் கிட்டத்தட்ட 2012ஆம் ஆண்டு காலப்பகுதியில் மக்கள் காலாகாலமாக விவசாயம் மேற்கொண்டுவந்த மற்றும் மேய்ச்சல் தரையாக பயன்னடுத்தப்பட்டு வந்த பல ஆயிரம் ஏக்கர் காணிகள் வன வள பாதுகாப்பு திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களங்களால் வர்த்தமானி அறிவித்தல் இன்றி கையகப்படுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மக்களுடைய, மக்கள் தொடர்ச்சியான பயன்படுத்திவந்த அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு அவசியமான காணிகள் என்றதன் அடிப்படையில் 41361 ஏக்கர் காணியை விடுவிக்கக்கோரி வனவள பாதுகாப்பு திணைக்களத்திடம் பல வருட காலமாக அதிகாரிகளினால் கோரிக்கை முன் வைக்கப்பட்டு வந்தபோதும் எதுவும் சாத்தியமாகவில்லை. இருப்பினும் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 10432 ஏக்கர் விடுவிக்க கோரி வந்த நிலையில் தற்போது 548.5 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று ஏனைய இடங்களிலும் மக்களுடைய நிலங்கள் விடுவிக்கப்பட்டு மக்களினதும், நாட்டினதும் பொருளாதார வளர்ச்சிக்காக அவை பயன்படுத்தப்பட வேண்டும்.

