வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு சர்வதேச நீதியைக் கோரி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் வடக்கில் யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவில் இருந்து செம்மணி வரையும் கிழக்கில் பழைய கல்லடிப் பாலத்திலிருந்து காந்திப் பூங்காவரையும் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் இந்த பேரணி கல்லடி பாலத்தில் ஆரம்பித்து காந்தி பூங்கா வரை முன்னெடுக்கப்பட்டது.
இதில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், பல்கலைக்கழக மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் எனப் பலரும் பங்குபெற்றனர்.
உள்நாட்டு நீதிபொறிமுறையில் 17வருடமாக நம்பிக்கையிழந்த நிலையில் தொடர்ச்சியாக சர்வதேச நீதிப்பொறிமுறையினை கோரிவரும் நிலையில் எதிர்வரும் ஐநா மனித உரிமைகள் அமர்வின் போது தமது கோரிக்கைக்கு வலுசேர்க்கும் வகையிலான தீர்மானத்தினைக் கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.