மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்திற்கு முன்னரே முத்து நகர் நில விவகாரமானது 2025 ஜூலை 29ஆம் தேதி தற்காலிக தீர்வு காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
விவசாயிகளுக்கு எந்த சட்டப் பிரச்சினைகளோ அல்லது நீதிமன்ற உத்தரவுகளோ இல்லாமல் அனைத்து நிலங்களிலும் விவசாயத்தை தொடர அரசு அனுமதி வழங்கியதோடு சூரிய சக்தி நிறுவனங்கள் பணிகளைத் தொடங்கிய சுமார் 10% நிலம் மட்டுமே தற்போதுள்ள நீதிமன்ற உத்தரவினால் வியசாயிகளுக்கு கிடைக்காத நிலையிலுள்ளது எனவும் வெளிநாட்டு விவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கான பிரதி அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய திரு. அருண் ஹேமச்சந்திர குறிப்பிட்டார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், அந்த நிலத்தை இழந்த விவசாயிகளுக்கு நஷ்டஈடு மற்றும் நிலத்தை மீட்டெடுக்கும் மாற்று வழிகள் பற்றி அரசு தொடர்ந்து ஆராய்கிறது.
இவ்விடயம் பற்றி தெரிந்திருந்தும் தமது அரசியல் சுயலாபங்களுக்காக ஒரு சிறிய குழு திட்டமிட்ட வகையில் பொது மக்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பது மிகவும் கவலைக்குரியது. இந்த போராட்டங்கள் பிரச்சினையை தீர்க்க அல்ல, மாறாக, பிரச்சனையை தீர்க்க இடமளிக்காமல் நாட்டை இக்கட்டான சூழ்நிலையில் வைக்க முயற்சிக்க என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
நாட்டின் ஸ்திரத்தன்மையை பணயம் வைத்து, ஒரு சிலரின் நலன்களை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்படும் இந்த திட்டமிடப்பட்ட பிரச்சாரங்களால் ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும், சட்டத்தை மதிக்கும், ஒரு நிரந்தர தீர்வை வழங்குவதில் எங்கள் கவனம் தொடர்ந்து உள்ளது எனவும் பிரதி அமைச்சர் தனது சமூக வலைத்தள பதிவிலே குறிப்பிட்டிருந்தார்.