திருகோணமலை மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நீண்டகாலமாக சூட்சுமமான முறையில் திருட்டில் ஈடுபட்டு வந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக (14) பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பல மாதங்களாக பல இடங்களில் தொடர்ச்சியாக திடுட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வந்தன. இது தொடர்பில் மக்களால் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய பொலிஸாரினால் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் மோப்ப நாய்களின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது 27 வயதான குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் எத்தாபெந்திவெவ பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர் எனவும் நீண்டகாலமாக திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் இவர்மேல் மக்களுக்கு சந்தேகம் இருந்ததாகவும் தெரிய வருகின்றது.
சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சஞ்ஜீவ பண்டாரவின் ஆலோசனைக்கு அமைய மொறவெவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கீர்த்தி சிங்ஹவின் வழிகாட்டலில் உதவி பொலிஸ் உத்தியோகத்தர் எஸ்.டபிஸ்யூ.பி.ஆர். ஜயம்பதியின் தலையையிலான குழுவினரால் குறித்த நபரை கைது செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.