தென் இலங்கையில் உள்ள தஞ்சை நகரம் எனும் இடத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிள்ளையார் கோயில் ஒன்று அழிந்து கொண்டிருக்கிறது. இன்றைய திஸ்ஸமகாரமையின் அருகில் சில தமிழ்க் குடும்பங்கள் வாழும் பகுதியில் இக்கோயில் காணப்படுகிறது. இவ்விடம் சிங்கள மொழியில் “தஞ்ச நகர” என அழைக்கப்படுகிறது.
2250 ஆண்டுகளுக்கு முன்பு அநுராதபுரம் இலங்கையின் தலைநகராக இருந்த காலப்பகுதியில் அங்கிருந்து தப்பிவந்த அல்லது துரத்தப்பட்ட மன்னர்கள் அல்லது போரில் தோற்கடிக்கப்பட்ட மன்னர்கள் தஞ்சம் அடையும் பிரதேசமாக இவ்விடம் விளங்கியமையால் இது “தஞ்ச நகரம்” எனப் பெயர் பெற்றிருக்க வேண்டும்.
தஞ்சை நகரம் எனும் பெயர் இந்த இடத்திற்கு வழங்கப்பட்டமைக்கு இன்னுமோர் காரணமும் கூறப்படுகிறது. சோழர் முழு இலங்கையையும் ஆட்சி செய்து வந்த காலப்பகுதியில் சோழநாட்டின் தலைநகராக இருந்த தஞ்சாவூரில் இருந்து அழைத்து வரப்பட்ட மக்கள் மற்றும் படையினர் இங்கு தங்க வைக்கப்பட்டதால் இவ்விடத்திற்கு “தஞ்சை நகரம்” எனப் பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. இக்கால கட்டத்தில் இவர்களால் கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபடப்பட்டிருக்க வேண்டும்.
அதன் பின் 1029ல் ருகுணை இராச்சியம் மீண்டும் சிங்கள மன்னர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. சோழர் மீண்டும் ராஜரட்டை பகுதிக்குப் பின் வாங்கினர். இக்கால கட்டத்தில் தஞ்சை நகரில் வாழ்ந்த தமிழர்கள் ராஜரட்டை பகுதிக்கு இடம் பெயர்ந்தனரா அல்லது விஜயபாகுவின் ஆட்சியின் கீழ் தஞ்சை நகரில் தொடர்ந்து வாழ்ந்து வந்தனரா என்பது தொடர்பான குறிப்புகள் இல்லை.
இது இப்படி இருக்க அண்மைக் காலத்தில் எழுதப்பட்ட சிங்கள மொழிக் குறிப்புகளில் இவ்விடத்துக்கு தஞ்சை நகரம் எனும் பெயர் உண்டானதற்கு இன்னுமோர் காரணமும் கூறப்பட்டுள்ளது. திஸ்ஸ மகராமை பகுதியில் உள்ள நகரசபை மற்றும் நீர்ப்பாசன அலுவலகம் ஆகியவற்றில் பணிபுரிவதற்காக தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூரில் இருந்து மக்கள் அழைத்து வரப்பட்டு திஸ்ஸவாவி குளத்தின் அருகில் குடியமர்த்தப்பட்டதாகவும், இதன் காரணமாக இவ்விடம் தஞ்சை நகரம் எனப் பெயரிட்டு அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இவர் கள் எந்தக் காலப்பகுதியில் தஞ்சாவூரில் இருந்த அழைத்து வரப்பட்டார் கள் என்பது பற்றி அதில் கூறப்படவில்லை.
ஆனாலும் இவ்விடம் தஞ்சை நகரம் எனப் பெயர் பெற்றிருந்தமை, இங்கு தமிழர்கள் வாழ்ந்தமை ஆகிய விடயங்கள் பற்றிய ஆங்கிலேயர் காலக் குறிப்புகள் சிலவும் உள்ளன.
இத்தனை தொன்மை வாய்ந்த தஞ்சை நகரம் கிராமத்தில் 60 க்கும் மேற்பட்ட தஞ்சாவூர் தமிழ்க் குடும்பங்கள் வாழ்ந்து வந்துள்ளனர் எனத் தெரிகிறது.
1915 ஆம் ஆண்டு தென்னிந்தியாவில் இருந்து வந்த மதனகுரு எனும் சுவாமி கதிர்காமக் கந்தனை தரிசிக்க வரும் வழியில் இங்கிருந்த தஞ்சை நகரம் எனும் கிராமத்தில் இருந்த ஒரு இடம் இவரின் கவனத்தை ஈர்த்ததாகவும், பண்டைய காலத்தில் இப்பகுதி வழியாக கதிர்காமத்துக்கு வந்த முனிவர்கள் இவ்விடத்தில் முருகனின் வேலாயுதத்தை வைத்து வழிபட்டு சென்றமைக்கான அடையாளங்கள் காணப்பட்டதாகவும், அதனால் மதனக்குரு சுவாமி அவ்விடத்தில் தங்கி, தானும் அங்கு முருகனின் வேலாயுதத்தையும், பிள்ளையார் சிலையையும் வைத்து வழிபட்டுச் சென்றதாகவும் தெரிய வருகிறது.
பின்பு மதனகுரு சுவாமி இவ்வூர் மக்கள் மற்றும் கொட்டகல மக்கள் ஆகியோரின் உதவியுடன் இக்கோயிலைப் பெரிதாகக் கட்டினார். தென்னிந்தியாவில் இருந்து சிற்பங்கள் செதுக்கப்பட்ட நான்கு துண்டுகள் அடங்கிய இரண்டு கருங்கற் தூண்கள், பிள்ளையார் சிலை, முருக வேலாயுதம் ஆகியவற்றை வரவழைத்து தஞ்சை நகரில் சிறிய கோயிலைக் கட்டினார்.
மண்டபம், கருவறை, சுற்றுப் பிரகாரம் ஆகியவை அமைக்கப் பட்டன. அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்ட நான்கு கருங்கல் துண்டு களையும் பொருந்தி இரண்டு தூண்களை உருவாக்கி கோயிலின் மண்டப வாசலில் வைத்துக்கட்டி, கோயில் கருவறையில் வேலாயுதம், பிள்ளை யார் ஆகிய சிலைகளை ஸ்தாபித்து கோயிலைக் கட்டி முடித்தார். அன்று முதல் இக்கோயில் மக்களால் போற்றி வழிபடப்பட்டது. இக்கோயிலின் சிறப்பம்சமே மண்டபத்தில் காணப்படும் இரண்டு கருங்கல் தூண்களாகும். மிக்க அழகுடைய பல சிற்பங்கள் இத் தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன. இது குளவிப் பிள்ளையார் கோயில் என அழைக்கப்பட்டது.
அக்கால கட்டத்தில் தஞ்சை நகரில் மொத்தமாக 5 கோயில்கள் இருந்ததாகத் தெரிய வருகிறது. சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நல்ல நிலையில் காணப்பட்ட இக்கோயில்கள் 1983 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட இனக் கலவரத்தின் போது இங்கிருந்த மக்கள் ஊரை விட்டு வெளியேறிய நிலையில் முற்றாக அழிக்கப்பட்டன.
அழிந்த நிலையில் காணப்பட்ட இக் கோயில் மட்டும் 1987 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கம் உதாவ திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டது. அதன் பின் சிறப்பாக வழிபடப்பட்டு வந்த இக் கோயில் நிலத்தையும், கோயிலையும் அபகரிக்கும் நோக்கில் சிலர் மேற் கொண்ட நடவடிக்கையின் காரணமாக இக்கோயிலுக்கு பெரும் நெருக்கடிகள் உருவாயின.
கருவறையில் இருந்த பெரிய பிள்ளையார் சிலை 2007 ஆம் ஆண்டு விஷமிகளால் களவாடப்பட்டது. அதன்பின்பு வழி பாடு அற்ற நிலையில் கோயில் மீண்டும் பாழடைந்தது.
இக்கோயில் 2011 ஆம் ஆண்டு வரை பாழடைந்து, காணப்பட்ட இக் கோயிலின் கருவறையில் ஒரு சிறிய சுதை பிள்ளையாரை வைத்து, அன்று முதல் மாதாமாதம் பெளர்ணமி தினத்தில் பொங்கல் வைத்து, பூஜை செய்து வழிபட்டு வந்தனர்.
2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இக்கோயில் உரிமையாளரான விஸ்வநாதன் அவர்களுடன் நான் இங்கு சென்றேன். அன்று எனக்கு இக்கோயிலை ஆராயும் வாய்ப்பும் கிடைத்தது. அவர் மூலம் கோயில் பற்றிய சில வரலாற்றுத் தகவல்களை அறிந்தேன். மேலும் இவ்விடம் பற்றி ஆராய்ந்தபோது தஞ்சை நகரம் எனும் இவ்வூரின் தொன்மை வர லாறு வெளிப்பட்டது.
இவ்விபரங்களை முகநூலில் பதிவிட்டேன்.
அதன் பின்பு 2023 ஆம் ஆண்டு இக்கோயிலுக்குச் சென்றேன் அப்போதும் இக்கோயில் கட்டப்பட வேண்டும் என வழியுறுத்தி மீண்டும் முகநூலில் பதிவிட்டேன்.
அண்மையில் மீண்டும் இக்கோயிலுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது முன்பு இருந்தாய் விட இக்கோயில் அழிந்து கொண்டு வருவதை அவதானிக்க முடிந்தது.
தற்போது கூரைகள் சிதைந்து, பாழடைந்த நிலையில் காணப்படும் தொன்மை வாய்ந்த தலப் பெருமையைக் கொண்ட இக்கோயில் புனர மைக்கப்பட வேண்டும். கருவறையில் சிலைகளை ஸ்தாபித்து, ஊர் மக்க ளும், கதிர்காமத்துக்கு யாத்திரை செல்லும் மக்களும் தினமும் வழிபட்டுச் செல்லும் நிலையை உருவாக்க வேண்டும். இதன் மூலம் எமது பாரம்பரிய அடையாளத்தை தென்னிலங்கையில் மீண்டும் நிலை பெறச் செய்யலாம்.
அண்மைக்காலமாக சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் மதவாச்சி, தம்புள்ளை, ஹபரனை ஆகிய இடங்களில் இருந்த பழமை வாய்ந்த இந்துக் கோயில்கள் எமது மக்களின் உதாசீனப்போக்கால் புனர மைக்கப்படாமலும், பராமரிக்கப்படாமலும் கைவிடப்பட்டமையால், அவை இந்துக்கள் அல்லாதவர்களின் கைகளுக்குச் சென்று, முற்றாக அழிந்து போனமையும், அதன் பின்பு இந்து அமைப்புகளும், தமிழர் பிரதிநிதிக ளும் அவ்விடங்களுக்குச் சென்று அதை மீட்டெடுக்க முயற்சி செய்வ தும், கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் செய்வது போன்ற பிரயோசனமற்ற செயற்பாடுகளாகத் தெரிகின்றன. இச்செயற்பாடுகள் மூலம் மேற் குறிப்பிட்டுள்ள இடங்களில் பல நூற்றாண்டுகளாக இருந்த கோயில்கள் எதுவும் மீட்டெடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே மத வாச்சி, தம்புள்ளை, ஹபரனை ஆகிய இடங்களில் இருந்த கோயில்களுக்கு ஏற்பட்ட நிலை, திஸ்ஸமஹாராமை-தஞ்சை நகரில் காணப்படும் இப்பிள்ளையார் கோயிலுக்கும் ஏற்பட்டு விடக்கூடாது.
கலாநிதி
என்.கே.எஸ். திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்