திருகோணமலை நகருக்குள் கட்டுப்பாடின்றி சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்கள் நாள்தோறும் பல்வேறு அசௌகரியங்களையும் பாதுகாப்பு அச்சங்களையும் எதிர்கொண்டு வருகின்றனர். பல முறை பொதுமக்களும் ஊடகங்களும் இந்தப் பிரச்சினையை சுட்டிக்காட்டிய போதிலும், இதுவரை நிலையான தீர்வு எட்டப்படவில்லை.
அரசடி சந்தி, பிரதான வீதி, கஸ்கிசன் வீதி உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் மாடுகள் கூட்டம் கூட்டமாக நடமாடுவது வழக்கமாகிவிட்டது. குறிப்பாக காலை நேரங்களில் பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்கள், அலுவலகங்களுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் இடையூறுகளையும் விபத்து அபாயங்களையும் எதிர்கொள்கின்றனர்.
மாடுகள் வீதிகளை ஆக்கிரமித்து நிற்பதோடு, கடைகளின் முன்பாக உணவு தேடி திரிவதும், வீதிகளை சாணத்தால் அசுத்தப்படுத்துவதும் நகரின் சுகாதாரத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பாதசாரிகள் மட்டுமன்றி சுற்றுலாப் பயணிகளிடமும் நகரின் தோற்றம் குறித்து எதிர்மறையான எண்ணம் உருவாகும் நிலை காணப்படுகிறது.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக நகருக்குள் சுற்றித்திரியும் கால்நடைகளைப் பிடித்து பராமரிப்பதற்கான உபவிதி (By-Law) இன்னும் இயற்றப்படாத நிலையில், மாநகர சபையால் சட்டரீதியான நடவடிக்கைகளை முழுமையாக முன்னெடுக்க முடியவில்லை என்ற காரணம் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.
ஆனால், இந்த விவகாரம் நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு வந்த போதிலும், தேவையான உபவிதியை இயற்றுவதிலேயே ஏற்பட்டுள்ள தாமதம் மாநகர சபையின் நிர்வாகச் செயற்பாடு குறித்து பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நகரின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் போக்குவரத்து ஒழுங்கை உறுதிப்படுத்துவதற்காக கால்நடை கட்டுப்பாட்டு உபவிதியை உடனடியாக நிறைவேற்றி, பொறுப்பற்ற முறையில் கால்நடைகளை வீதிகளில் திரியவிடும் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.


