திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, மூன்று சந்தேகநபர்கள் தங்களைத் தாங்களே காயப்படுத்தி உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் புதன்கிழமை (28) நீதவான் முன்னிலையில், சந்தேகநபர்கள் நீதிமன்றக் குற்றவாளிக் கூண்டில் இருந்தபோது இடம்பெற்றுள்ளது.
கடந்த திங்கட்கிழமை (26) நிலாவெளிப் பகுதியில் சட்டவிரோதமாக கைக்குண்டுகள் மற்றும் துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில், திருகோணமலை தலைமையகப் பொலிஸாரால் ஐந்து பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த ஐந்து சந்தேகநபர்களும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே, அவர்களில் மூவர் தாங்கள் மறைத்து வைத்திருந்த பிளேட்களால் தங்களது கழுத்துப் பகுதியில் வெட்டிக் காயப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதில் ஒருவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டு அதிகளவில் இரத்தம் வெளியேறியதுடன், அவர் நீதிமன்ற வளாகத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இதனால் நீதிமன்றத்தில் இருந்த பொதுமக்கள், சட்டத்தரணிகள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியும் பதற்றமும் ஏற்பட்டது.
இதனையடுத்து உடனடியாகச் செயற்பட்ட பொலிஸாரும் நீதிமன்ற அதிகாரிகளும் காயமடைந்த மூவரையும் மீட்டு, திருகோணமலை பொது வைத்தியசாலையின் விபத்துச் சேவைப் பிரிவில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு அவசர சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, சட்டவிரோதமாகக் கைக்குண்டுகள் மற்றும் துப்பாக்கிகளை வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

