கலை மற்றும் கலாச்சார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும், கலைஞர்களின் அபிவிருத்தித் திட்டங்களுக்கான நிதியைத் திரட்டுவதற்குமான நோக்கில் பிரதேச கலாச்சார அதிகார சபையின் ஏற்பாட்டிலும், திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பிலும் நேற்று (27) நடைபெற்ற மேற்கத்திய பேண்ட் இசை நிகழ்வு வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி வளாகத்தில் நேற்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வில், திருகோணமலையைச் சேர்ந்த ஐந்து பாடசாலைகளின் மாணவர்கள் பங்கேற்று தங்களது இசைத் திறமைகளை வெளிப்படுத்தினர்.
பொதுமக்களின் வசதிக்காக இந்நிகழ்வு மூன்று காட்சிகளாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்ததுடன், ஒவ்வொரு காட்சிக்கும் பெருமளவிலான பார்வையாளர்கள் வருகை தந்து மாணவர்களின் இசை நிகழ்ச்சிகளை உற்சாகமாகக் கண்டு ரசித்தனர்.
பாடசாலை மாணவர்கள், பெற்றோர், நலன் விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்துகொண்டதுடன், கலை மற்றும் கலாச்சார நடவடிக்கைகளுக்கான நிதி சேகரிப்பிற்கும் தங்களது பங்களிப்பை வழங்கினர்.
அரசின் நிதி ஒதுக்கீட்டை மட்டுமே சார்ந்திராமல், சமூகப் பங்களிப்பின் ஊடாக கலை மற்றும் கலாச்சார செயற்பாடுகளை முன்னெடுத்து, கலைஞர்களின் திறன் மேம்பாடு மற்றும் எதிர்கால நிகழ்வுகளுக்கான நிலையான நிதி ஆதாரத்தை உருவாக்கும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர், பிரதேச செயலக அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், நலன் விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
மேற்கத்திய இசையின் ஊடாக மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்ததோடு, கலை மற்றும் கலாச்சார வளர்ச்சிக்கான சமூகப் பொறுப்புணர்வை வலுப்படுத்திய சிறப்பான முயற்சியாக இந்நிகழ்வு அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

