அனுராதபுரத்தில் பௌத்த துறவி ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளானதாகக் கூறப்படும் சிறுமிக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, இன்று (29.05.2026) மாலை திருகோணமலை மாவட்ட பிரதான பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக அமைதியான கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இக்கவனயீர்ப்பு நடவடிக்கையின் சிறப்பம்சமாக, தமிழ் மற்றும் சிங்கள மொழி பேசும் சமூகங்களைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து ஒன்றிணைந்து பங்கேற்றிருந்தனர்.
போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் “சிறுமியின் கண்ணீர் மௌனமாகாது”, “மத ஆடையின் பின்னால் மறையும் குற்றங்களுக்கு நீதி வேண்டும்”, “குற்றவாளி யாராக இருந்தாலும் தண்டனை வழங்கப்பட வேண்டும்”, “சிறார்களைக் காப்போம்; குற்றங்களை நிறுத்துவோம்”, “சிறார்களின் பாதுகாப்பு எங்கள் உரிமை”, “தனியான நீதி வேண்டாம்; அனைவருக்கும் சமமான நீதி வேண்டும்” மற்றும் “மதம் தனிப்பட்ட தெரிவு; சட்டம் அனைவருக்கும் சமமானது” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.
சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகச் சம்பவங்கள் எந்த மதம், இனம் அல்லது சமூகத்தைச் சேர்ந்தவர்களால் மேற்கொள்ளப்பட்டாலும் அவை ஒரே சட்டத்தின் அடிப்படையில் விசாரிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதையே இக்கவனயீர்ப்பு நடவடிக்கை வலியுறுத்தியதாக பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர்.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் சுயாதீனமான, வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட்டு, குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும், சிறார்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.


