இந்தியக் கடற்படையின் புகழ்பெற்ற பாய்மரப் பயிற்சி கப்பலான ‘ஐஎன்எஸ் தரங்கிணி’ (INS Tarangini), திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்தில் வைத்து இலங்கை கடற்படையினருக்கான விசேட பயிற்சிகளை கடந்த 27ம் திகதி மாலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தது.
இரு நாட்டு கடற்படைகளுக்கும் இடையிலான நீண்டகால ‘நட்புறவுப் பாலங்களை’ (Bridges of Friendship) வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இப்பயிற்சி நெறியில், இலங்கை கடற்படையைச் சேர்ந்த 25 பயிற்சி அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
இன்றைய ஆரம்ப நிகழ்வின் போது, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் (Defence Adviser) கொமடோர் ஆனந்த் முகுந்தன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
இப்பயிற்சியின் ஒரு சிறப்பம்சமாக, பயிற்சியில் ஈடுபடும் இலங்கை கடற்படை வீரர்களின் குடும்பத்தினரும் இன்று கப்பலுக்கு வருகை தந்திருந்தனர். அவர்கள் கப்பலின் உட்பகுதிகளைப் பார்வையிட்டதுடன், வீரர்களின் பயிற்சிச் சூழலையும் நேரில் கண்டு களித்தனர்.
நிகழ்வின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கப்பலின் கட்டளை அதிகாரி (Captain) கமாண்டர் நிதின் கஜ்ஜார், பின்வருமாறு குறிப்பிட்டார்,
”இந்திய – இலங்கை இடையிலான ஆழமான மற்றும் வரலாற்று ரீதியான நட்புறவின் அடிப்படையிலேயே இந்தப் பயிற்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
நவீன தொழில்நுட்பங்கள் நிறைந்த இன்றைய கடற்படைச் சூழலிலும், பாய்மரக் கப்பல் மூலம் வழங்கப்படும் அடிப்படைச் சீர்மியப் பயிற்சிகள் (Seamanship) ஒரு கடற்படை வீரரின் ஆளுமைக்கும், மன உறுதிக்கும் மிக அவசியமானவை. இவ்வாறான பயிற்சிகளை இலங்கை கடற்படைக்கு இந்தியக் கடற்படை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றது. இது இரு நாட்டு பாதுகாப்பு ஒத்துழைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை.”

