(15.02.2026) – அகம் மனிதாபிமான வள நிலையம் (AHRC) அமைப்பினால், இலங்கை அரசால் கொண்டு வரப்பட உள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாப்பதற்கான சட்ட வரைவு (PSTA) தொடர்பான தெளிவூட்டல் நிகழ்வும், அதில் உள்ள சாதக மற்றும் பாதக அம்சங்கள் குறித்த உரையாடலும் திருகோணமலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். சட்ட வரைவின் உள்ளடக்கம், அதன் தாக்கங்கள் மற்றும் பொதுமக்கள் மீது ஏற்படும் விளைவுகள் குறித்து விரிவான கருத்துப்பகிர்வுகள் இடம்பெற்றன.

உரையாடல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கலந்து கொண்டவர்கள் “பயங்கரவாத தடுப்பு சட்டத்தை (PTA) நீக்குக; புதிய PSTA சட்ட வரைவை மீளப் பெறுக” என வலியுறுத்தும் மனுவில் கையொப்பமிட்டனர். குறித்த மனுவை நீதி அமைச்சருக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிகழ்வு, புதிய சட்ட வரைவு தொடர்பாக பொதுமக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

