சர்வதேச ரீதியில் ஐந்தாவது வருடமாக நடைபெற்ற “சம்பந்தன் பைந்தமிழ்ச் சுடர் 5.0 சொற்போர்” திறந்த விவாதச் சமரானது நேற்றும் இன்றும் (19,20/12/2025) மலேசியாவின் உத்தரா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய விவாத அணிகள் போட்டியிட்டிருந்தன.
இதில் இலங்கையின் தேசிய அணியில்
* செல்வன் ஜெயரூபன் ஹரிஸ் – ரோயல் கல்லூரி, கொழும்பு
* செல்வி லக்ஷ்மிதா சிவசங்கரன் – ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி திருகோணமலை
* செல்வன் மைக்கல் ஜெனுசன் – புனித பத்திரிசியார் கல்லூரி, யாழ்ப்பாணம்
* செல்வி பிரதீபன் சிவாஜினி – மெதடித்த பெண்கள் கல்லூரி, பருத்தித்துறை ஆகியோர் பங்குபற்றி இருந்தனர்.
இறுதிப்போட்டியில் சிங்கப்பூர் தேசிய அணியை தோற்கடித்து இலங்கையின் தேசிய விவாத அணியினர் 2025ம் ஆண்டிற்கான “சம்பந்தன் பைந்தமிழ்ச் சுடர் 5.0 சொற்போர்” வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்து வாகை சூடிக்கொண்டனர். வெற்றியாளர்கள் பணப்பரிசிலும் தங்கப்பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இன்று திருகோணமலை மண் பேருவகையும் பெருமையும் அடையும் வண்ணம், உலகின் தலைசிறந்த இளந்தமிழ் விவாதிகளில் ஒருவராக தி/ஸ்ரீ சண்முகாவின் செல்வி லக்ஷ்மிதா சிவசங்கரன் பாராட்டி கிண்ணம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அகில இலங்கை தமிழ் விவாதிகள் மன்றத்தினால் இலங்கை முழுவதிலுமிருந்து பாடசாலைகளிடையே நடாத்தப்பட்ட “மொழிமுனை – 2025” விவாதச் சுற்றுப்போட்டியின் அடிப்படையில் சிறந்த விவாதிகள் தெரிவுசெய்யப்பட்டு இப்போட்டிக்கான இலங்கையின் தேசிய விவாத அணி தயார் படுத்தப்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.
“மொழிமுனை -2025” போட்டியில் எமது தி/ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி நான்காம் இடத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். இதில் அகில இலங்கை ரீதியிலான சிறந்த விவாதிகளாக எமது கல்லூரியின் சி.லக்ஷ்மிதா – 4ம், ரெ. ஸ்ரீஅக்ஷயா – 7ம் இடங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

