2006ம் ஆண்டு திருகோணமலையில் நடந்த 5 மாணவர்களின் சுட்டுக்கொலையில் இறந்த ரஜிகரின் தந்தை வைத்தியர் மனோகரன் (68) நீதிக்காக ஏழாண்டுகள் போராடிய பின்னர், இன்று காலமானார். மகன் மரணத்திற்கு பின்னர் மனைவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், நீதிக்காக மனித உரிமை ஆணையத்தில் கண்ணீர் விட்டு கேட்டுக்கொண்ட அவர், “இலங்கை நீதிமன்றங்களில் நம்பிக்கை இல்லை” எனக் கூறியிருந்தார்.
2006 ஜனவரி 2ம் தேதி திருகோணமலை காந்தி சிலையருகே, மனோகரனின் மகன் ரஜிகர் உட்பட ஐவர் (யோகராஜா, லொஹிதராஜா, தங்கத்துரை, சண்முகராஜா) ஆகியோர் இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தை கண்ணாரக் கண்ட மனோகரன், தமது வாழ்நாள் முழுவதும் நீதிக்காகப் போராடினார்.
2013ல் மனித உரிமைகள் சபையில் மனோகரன் அளித்த கண்ணீர் கலந்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. “என் மகன் உட்பட ஐவரும் தமிழர்கள் என்பதற்காகவே இந்தக் கொடூரம் நடந்தது. நான் நேரில் பார்த்தேன். ஏழு வருடங்களாக நீதி கிடைக்கவில்லை” என அழுதுகொண்டே கூறியிருந்தார். சர்வதேச விசாரணையையே கோரிய அவருக்கு, இலங்கை நீதிமன்றங்களில் நம்பிக்கை இல்லை என்பதும் தெளிவாக்கியிருந்தார்.
இச்சம்பவத்தில் 12 இராணுவ அதிகாரிகள் 2013ல் கைது செய்யப்பட்டனர். எனினும், நல்லாட்சி அரசாங்க காலத்தில், நீதிமன்றம் அவர்களைக் குற்றமற்றவர்களாக விடுதலை செய்துவிட்டது. இந்த நீதித் தோல்வியே மனோகரனின் மன உளைச்சலை அதிகரித்ததாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
மகன் ரஜிகர் மரணத்தை தாங்கமுடியாமல், சில மாதங்களிலேயே மனோகரனின் மனைவி தற்கொலை செய்து கொண்டார். துயரத்தில் மூழ்கிய மனோகரனும், நீதி கிடைக்காமையால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்தார்.

நீதிக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய ஒரு தந்தை, இறுதிவரை நீதி காணாமலேயே நம்மை விட்டு சென்றுவிட்டார். இந்த இழப்பு தமிழ் மக்கள் முழுவதற்குமான ஒரு அடையாளமாகும்.
வைத்தியர் மனோகரனின் இறப்பு, திருகோணமலை Trinco Five கொடூரமான படுகொலையில் நீதி தேடும் பல குடும்பங்களின் துயரத்தையும், சிறிலங்கா நீதித்துறையின் குறைபாட்டையும் மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டுகிறது.
விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்குமிடையில் உள்நாட்டு யுத்தம் உச்சமடைந்திருந்தவேளை இடம்பெற்றிருந்த இந்த சம்பமானது மிக மோசமான மனித உரிமை மீறல் சம்பவங்களில் ஒன்று என உள் நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் தொடர்ந்தும் பேசப்படுகின்றது.
சர்வதேச மன்னிப்பு சபை உட்பட சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் இலங்கை அரசு மீது வன்மையான கண்டணத்தை அவ்வேளை வெளியிட்டிருந்தனர்.
ஐ. நா மனித உரிமை பேரவையிலும் இந்தப் படுகொலை இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களில் இடம்பெற்று விவாதிக்கப்பட்டிருந்தது.

