மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் பிறப்புச் சான்றிதழ் இல்லாதோருக்கான பிறப்புச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு , மூதூர் பிரதேச செயலாளர் M.B.M.முபாறக் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை (10) இடம்பெற்றது.
விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் அனுசரணையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது உள்நாட்டு யுத்தம் மற்றும் ஏனைய காரணங்களினால் பிறப்புச் சான்றிதழ் பெறாமல் இருந்த மூதூர் பிரதேச செயலகப் பிரிவைச் சேரர்ந்த 80 நபர்களுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.அத்தோடு காணி ஆவணங்கள் பெற்றுக் கொள்வதன் முக்கியத்துவம் தொடர்பாகவும் இதன்போது வருகை தந்தோருக்கு தெளிவூட்டல்கள் வழங்கி வைக்கப்பட்டன.
பிறப்புச் சான்றிதழ் இல்லாதோருக்கு பிறப்புச் சான்றிதழ் பெற்றுக் கொடுப்பதற்கான நடமாடும் சேவை இடம்பெற்று இதன் மூலம் அவர்களது தகவல்கள் பெற்றுக் கொள்ளப்பட்டதன் அடிப்படையில் பிறப்புச் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாண பிரதி பதிவாளர் நாயகம் ,மூதூர் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் மூதூர் பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் ,காணி உத்தியோகத்தர் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

