சுகாதார அமைச்சரின் வருகையை முன்னிட்டு, திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து சிறந்த சேவை வழங்கக் கோரி, இன்று வைத்தியசாலை முன்பாக பொது மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள், “வைத்தியசாலையில் சிறந்த சேவையை உறுதிப்படுத்துங்கள்”, “திடீர் மரண விசாரணை அதிகாரி போதாது”, “எலும்பு முறிவுக்கான தனிக் களம் வேண்டும்”, “நிறுத்தி வைக்கப்பட்டுள்ள யூரோ நிதிக் கட்டடம் திறக்கப்பட வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளைப் பதாகைகளில் ஏந்தி அமைதியாகக் கண்டனம் தெரிவித்தனர்.
முக்கிய கோரிக்கைகளாக, வைத்தியர்களுக்கான விடுதி வசதி, சிற்றூழியர்களின் பற்றாக்குறை நிவர்த்தி, பிரசவத்திற்கு வரும் தாய்மார்களுடன் மரியாதையான நடத்தை, நோயாளிகளை நிலத்தில் படுக்க வைக்கும் நிலை மாற்றுதல் போன்றவை முன்வைக்கப்பட்டன.
போராட்டத்தின் இறுதியில், கோரிக்கைகள் அடங்கிய மனுவைப் போராட்டக்காரர்கள் சுகாதார அமைச்சரிடம் நேரடியாகக் கையளித்தனர். மனுவில், வைத்தியசாலையின் தரம் குறைவாக இருப்பதால் நோயாளிகள் பல சிரமங்களைச் சந்தித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டு, பௌதீக மற்றும் ஆள் வளப் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்து தரமான சேவையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரப்பட்டது.