திருக்கோணமலை நகரசபை மாநகரசபையாக தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் (28) மாநகரசபையின் செங்கோல் புதிதாக உருவாக்கப்பட்டு கொண்டுவரப்பட்டது.
திருகோணமலை மாநகரசபையின் மூன்றாவது சபை அமர்வு கௌரவ மாநகர முதல்வர் க.செல்வராஜா(சுப்ரா) அவர்களின் தலைமையில் (28.08.2025) நடைபெற்றது.
அமர்வின்போது சபைக்கு கொண்டுவரபட்ட செங்கோல் திருகோணமலையின் அடையாளமாக நந்தி உள்வாங்கப்பட்டு, அனைத்து மதங்களையும் பிரதிபலிக்கும் வகையில்
நான்கு மத தலங்களும் உள்ளடக்ப்பட்டு, திருக்குறளை முன்னிறுத்தி தமிழ் பாரம்பரிய கலை கலாச்சாரத்துடன் உருவாக்கப்பட்டு சபையில் முதல்வர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டது.

மாநகரத்தின் அதிகாரச் சின்னமாகத் திகழும் செங்கோல் கிட்டத்தட்ட 28 இறாத்தல் நிறையைக் கொண்டுள்ளதோடு 54 அங்குல நீளமுடையது. இச் செங்கோல், கருங்காலி மரம்,தேக்கு, மற்றும் வேம்பு,பித்தலை என்பவற்றினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மாநகரசபையினதும்,சபையின் ஊடாக முதல்வரின் அதிகாரச் சின்னமாகச் செங்கோல் விளங்கி வருவதால், செங்கோல் இன்றி மாநகரசபை அமர்வு இடம்பெற முடியாது. முதல்வர் சபாமண்டபத்திற்கு வருகை தரும் போதும், வெளியேறும் போதும், அவருக்கு முன்னே, ஆராட்ச்சி செங்கோலை ஏந்தியபடி செல்ல, அவரைத் தொடர்ந்து சபையின் செயலாளர் செல்வார்.
சபை அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது சபையின் மேசைக்குக் கீழே, அதற்கென அமைக்கப்பட்டுள்ள தாங்கியில் ஆராட்ச்சி அவர்களால் வைக்கப்பட்ட செங்கோல் காணப்படும்.