திருகோணமலை வரோதயநகர் படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் குடும்பத்தினரால் வரோதயநகர் பாதாள வைரவர் ஆலயத்தில் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும், அன்னதான நிகழ்வும் மாலையில் நினைவேந்தல் நிகழ்வும் இடம்பெற்றது.
இதன்போது படுகொலை செய்யப்பட்ட 11 பேருக்கும் விசேட ஆத்ம சாந்திப் பூசை இடம்பெற்றதுடன் அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது.
குறித்த படுகொலைச் சம்பவத்தில் குணராசா வசிகலா, குணராசா சங்கர், குணராசா கெங்கா, தேசிங்கன் இன்பன், தேசிங்கன் ஜெயந்தி, இராசரெட்ணம் ரபேந்திரராசா, கதிர்காமு நாகேஸ்வரி, வெள்ளையன் திருச்செல்வம், கந்தன் மாணிக்கம், சீனியன் மாணிக்கம் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன் காயமுற்ற நிலையில் வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டிருந்த கதிர்காமு என்பவருடைய எட்டுவயதான மகள் ஒருவர் வைத்தியசாலையில் இருந்து காணாமல் போயிருந்தார்.
1985ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி சனிக்கிழமை காலை கன்னியா பகுதியில் இருந்து வரோதயநகர் பகுதிக்குள் டிபென்டன் வாகனத்தில் வந்த ஆயுதம் தாங்கிய குழுவினர் வீதிவழியாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு வந்ததைத் தொடர்ந்து அக்கிராம மக்கள் பாதுகாப்புத் தேடி அயல் வீடுகளிலும் தங்கள் வீடுகளிலும் தஞ்சம் புகுந்தனர்.
இதன்போது, வைரவர் கோயிலுக்கு அருகில் உள்ள வீட்டைத் தட்டி கூப்பிட்டு அங்கு வந்த பிறீமாவில் வேலை செய்யும் வெள்ளையன் திருச்செல்வம் என்பவரை முதலாவதாக சுட்டுக் கொன்றனர் பின்னர் அங்கு ஓடி வந்த அவரது மாமனாரான கந்தன் மாணிக்கம் என்பவரை சுட்டுக் கொன்றனர்.
பின்னர் கந்தையா வீதிக்கு திரும்பிச் சென்றனர், அப்போது அங்கு வந்த சீனியன் மாணிக்கம் சுட்டுக் கொல்லப்பட்டார்.இதனால் பயத்தில் இருந்த மக்கள் தம்பிராசா என்பவருடைய வீட்டில் தஞ்சமடைந்து பதுங்கியிருந்தனர்.
அங்கு பிள்ளைகளின் அழுகுரல் சத்தம் கேட்க கந்தையா வீதிக்கு திரும்பி அங்கு இரண்டாவதாக இருந்த தம்பிராசாவின் வீட்டை தட்டி எட்டிப்பார்த்து அங்கு நிறைய மக்கள் இருக்கவே அந்த அறைக்குள் கைக்குண்டு ஒன்றை போட்டு வெடிக்கச் செய்தனர்.
அதன்போது, அங்கிருந்து காயங்களுடன் வெளியேறி ஓடியவர்களையும் சுட்டுக் கொன்றதோடு, அங்கிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட ஏழுபேர் படுகொலை செய்யப்பட்டனர்.
பின்னர் மாலையளவில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை ஏற்றிக் கொண்டு திருகோணமலை வைத்தியசாலைக்கு அக்கிராம மக்கள் கொண்டு சென்றனர்.
அங்கு காயமுற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கதிர்காமு என்பவருடைய 8 வயதான பெண் குழந்தை காணாமல் போயிருந்தார். இதுவரை அவர் தொடர்பான எவ்வித தகவல்களும் இல்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.