இலங்கை பயங்கரவாத மற்றும் விசாரணைப் பிரிவு (CTID) துடிப்பான இளம் தமிழ் செய்தியாளரும் மனித உரிமை செயற்பாட்டாளரும் புகைப்பட ஊடகவியலாளருமான கணபதிப்பிள்ளை குமணன் அவர்களை, ஆகஸ்ட் 17 அன்று முல்லைத்தீவு, அளம்பில் பொலிஸ் நிலையத்தில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுத்துள்ளது.
செம்மணி மட்டுமன்றி நில அபகரிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் சுற்றுச்சூழல் அழிவுகள் என தமிழர் பரப்பிலே இடம்பெறும் போராட்டங்கள் மற்றும் நிகழ்வுகளை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லும் குமணன் தொடர்ந்து இலங்கை பாதுகாப்பு படைகளால் குறிவைக்கப்பட்டு வருகின்ற அதேவேளை, தற்போதைய இந்த விசாரணைக்கான அழைப்பு, ஒரு இளம் தமிழ் செயற்பாட்டாளருக்கு, சுயாதீன ஊடகவியலாளருக்கு எதிரான இன்னுமொரு தொடர் அச்சுறுத்தலாகவே மனித உரிமை செயற்பாட்டாளர்களால் நோக்கப்படுகிறது.
குமணன் மீதான தொடர்ச்சியான ஒடுக்குமுறைகளின் தொகுப்பு
பல ஆண்டுகளாக புலனாய்வு துறையினரின் தொடர் கண்காணிப்பு, மிரட்டல், உடல் ரீதியான தாக்குதல் ஆகியவற்றுக்கு உள்ளாகி வரும் குமணன், பலமுறை போலீசாரால் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவரை இலங்கை கடற்படை மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஊடகப் பணியை மேற்கொள்வதிலிருந்து தடுத்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
குறிப்பிடத்தக்க சம்பவங்களில்:
- மே 2019 – நீதிமன்ற உத்தரவின்படி சிசிடிவி கேமராக்களை அகற்றுகின்ற செயல்பாடு முன்னெடுக்கப்படாமை குறித்து செய்தி வெளியிட நீராவியடி பிள்ளையார் கோவிலுக்கு சென்றபோது, கொக்கிளாய் காவல் நிலைய பொறுப்பாளரால் தாக்கப்பட்டமை.
- அக்டோபர் 2020 – சட்டவிரோத மரக்கடத்தல் தொடர்பான செய்தி சேகரிப்பின் போது அவரும் சக ஊடகவியலாளரும் மரக் கடத்தல்காரர்களால் தாக்கப்பட்டனர், இந்த தாக்குதலில், குமணன் தலையிலும் மூக்கிலும் காயம் அடைந்தார்.
- பிப்ரவரி 2021 – முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களின் பூர்வீக இடமாகிய தண்ணிமுறிப்பு நில உரிமை விவகாரத்தை செய்தியாக்கும் போது, வனத்துறை அதிகாரிகளால் மிரட்டல்.
- ஜூன் 2022 – வட்டுவாகலில் கடற்படையின் சட்ட விரோத நில அபகரிப்புக்கு எதிரான போராட்டத்தை செய்தியாக்கும் போது, உடல் ரீதியாக மறுத்து தடுத்தபடி, மிரட்டலுக்கு உள்ளானார்.
- நவம்பர் 2022 – புதிய கட்டளை அதிகாரியின் வேண்டுகோளின் படி முல்லைத்தீவின் அனைத்து வர்த்தக நிறுவனங்கள் தொடர்பாகவும் செய்தி திரட்டுவதாக கூறி முல்லைத்தீவு ஊடக அமையத்தில் வைத்து சீருடை அணிந்த காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டார் .
- டிசம்பர் 2022 – கடற்படை மற்றும் காவல்துறை அதிகாரிகளினால் எதிர்கொண்ட அச்சுறுத்தல்கள் குறித்து வாக்குமூலம் அளிக்க முல்லைத்தீவு உதவி போலீஸ் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டார்.
Front Line Defenders மற்றும் Reporters Without Borders போன்ற சர்வதேச மனித உரிமை அமைப்புகள், தமிழ் செய்தியாளர்கள் மீதான தொடர்ச்சியான ஒடுக்குமுறை மற்றும் துன்புறுத்தல்கள் குறித்து கடுமையான அதிருப்தியை தெரிவித்துள்ளன.
“வடகிழக்கில் ஊடகப் பணியாளர்கள், குறிப்பாக தமிழ் நிருபர்கள், சுதந்திரமாக செய்தி வெளியிட முடியாத சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஊடகத் துறையின் சுதந்திரத்துக்கும் சுயாதீனத்தன்மைக்கும் அத்தோடு அடிப்படை உரிமையான கருத்துச் சுதந்திரத்துக்கும் நேரடியான அச்சுறுத்தல்,” என்று மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் குமணன் அவர்களின் அண்மைய முகப்புத்தக பதிவில்
“இந்த நேரத்தில் இந்த CTID அழைப்பாணையை பெறுவது எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகின்றது. எனது நாட்டில் நான் சுதந்திரமாக, அச்சமின்றி வாழவும், பணியாற்றவும் விரும்புகிறேன். ஆகவே இவ்வாறான ஒடுக்குமுறை கருவியான விசாரணைகள் நிறுத்தப்பட்டு அச்சமின்றி பணி செய்யும் சூழல் உறுதிப்படுத்தப்படவேண்டும்.” என்று குறிப்பிட்டிருந்தார்.
வடகிழக்கில் அதிகரித்து வரும் இராணுவமயமாக்கல் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தை மேற்கோளிட்டு இடம்பெறும் புலனாய்வு துறையினரின் விசாரணைகள், ஊடகப் பணியாளர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான தொடர் அடக்குமுறை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது.