திருகோணமலை மாவட்டம் மூதூரில் பத்தொன்பது வருடங்களுக்கு முன்னர் கொல்லப்பட்ட 17 நிவாரணப் பணியாளர்கள் இன்றைய தினம் மாலை 6.00 மணியளவில் திருகோணமலை உவர்மலை சுப்ரா பூங்காவில் நினைவுகூரப்பட்டனர்.
திருகோணமலையின் சமூக, அரசியல் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் எனப்பலரும் உயிரிழந்தவர்களின் புகைப்படங்கள் அடங்கிய பதாகையின் முன் மெழுகுவர்த்தி ஏற்றி அவர்களை நினைவு கூர்ந்தனர்.
ஓகஸ்ட் 4, 2006 அன்று, பிரான்சின் பரிஸைத் தளமாகக் கொண்ட சர்வதேச அமைப்பான ‘Action Against Hunger’ (ACF) மூதூர் அலுவலகத்தில் பணிபுரிந்த 17 இலங்கை உதவிப் பணியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த 17 பேரில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த 16 இலங்கையர்களும் முஸ்லிம் வம்சாவளியைச் சேர்ந்த ஒரு இலங்கையரும் அடங்குவர்.
அவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்களாவர். மூதூர் பிரதேசத்தை கைப்பற்றும் நோக்கில் இலங்கை அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றவேளையில், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக நிவாரணப் பணியாளர்கள் மூதூருக்குச் சென்றிருந்தனர். ஓகஸ்ட் 4, 2009 அன்று, மூதூர் படுகொலையின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளில், யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பு வெளியிட்ட விரிவான அறிக்கை, படுகொலைகளுக்கு அரசாங்கப் பாதுகாப்புப் படையினரே காரணம் என்பதை வெளிப்படுத்தியது.
இன்று வரை நியாயம் கிடைக்கப்பெறாத திருகோணமலையை உலுக்கிய மிகக்கொடூரமான படுகொலைகளுள் இதுவும் மக்கள் மனங்களிலிருந்து மறவாத வலமிகுந்த வடுவாகும்.