வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கான கௌரவமான அரசியல் தீர்வை பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, திருகோணமலை மாவட்டம் வெருகல் பகுதியில் நேற்று (ஆகஸ்ட் 2) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று அமைப்புமுறையில் முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம், மூன்றாவது ஆண்டாக இம்முறை “100 நாள் செயல்முனைவு” திட்டத்தின் ஒரு பகுதியாக 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தின் இரண்டாம் நாளாக வெருகல் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வை வடக்கு-கிழக்கு ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாடு செய்திருந்தது.
போராட்டத்தில் மீனவர்கள், விவசாயிகள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், பெண்கள் அமைப்பினர், இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் போது, “எங்கள் நிலம் எமக்கு வேண்டும்”, “கருத்துச் சுதந்திரம் எங்கள் உரிமை”, “ஒன்றுகூடுவது எங்கள் உரிமை”, “அரசியல் உரிமை எமக்கு வேண்டும்” போன்ற கோசங்கள் எழுப்பப்பட்டன.