திருகோணமலை நகர் பகுதிகளில் வீதி சமிக்கைகள் பொருத்தப்பட வேண்டுமென திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்று (29) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற போதே அவர் இக்கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்.
இதன் அடிப்படையில்
01. திருகோணமலை மாநகர சபை எல்லைக்குள் அடங்கும் 4 ஆம் கட்டைச் சந்தி, அனுராதபுரச் சந்தி, அபயபுரச் சந்தி, உவர்மலைச் சந்தி,மின்சார நிலைய வீதி மற்றும் கடல்முக வீதிச் சந்தி,அஞ்சல் அலுவலகச் சந்தி, 3 ஆம் கட்டைச் சந்தி ஆகியவற்றில் வழிச்செல்/சமிக்கை (signal)விளக்குகள் பொருத்த ஆவன செய்ய வேண்டும்.
02. திருகோணமலை பொது மீன் சந்தைப் பகுதியில் இருந்து மூன்றாம் கட்டை (3rd Mile Post) வரையான கடற் பகுதியில் உள்ள மீன்பிடி படகுகள் மாரி காலத்தில் கடற் பெருக்கினால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்படுகின்ற சூழல் காணப்படுகின்றது. இதனை தடுக்கும் வகையில் கடலோரத்தில் வள்ளங்கள் நிறுத்தக்கூடிய வகையில் அடுக்குமாடி படகு தரிப்பிடம் ஒன்றினை அமைக்க ஆவன செய்ய வேண்டும்.

03. திருகோணமலை நகர்புறத்தில் உண்டாகும் வாகன நெரிசலை தவிர்க்கவும், சுற்றுலா பயணிகள் கடற்கரை அழகை ரசிக்கவும் கொழும்பு நகரத்தில் உள்ளது போன்று திருகோணமலை நகரின் கடலோரமாக Our lady of Guadalupe Church இல் இருந்து புறாமலை வரையான கடலோரப்பாதை ( Marine drive ) அமைக்கப்பட வேண்டும்.
04. அன்புவழிபுரம் ,செல்வநாயகபுரம்,வரோதயநகர் ஆகிய கிராமங்களில் வதியும் மக்கள் குடிநீரைப் பெறுவதில் இன்னல் படுகின்றனர். இச்சிக்கலை தீர்க்கும் பொருட்டாக இந்த மூன்று கிராமங்களுக்கும் நீர் வழங்கும் வகையில் ஒரு நீர்த்தொட்டி அமைக்க ஆவன செய்ய வேண்டும்.
05. யான் ஓயா திட்டத்தின் கீழ் அடங்கும் நான்கு குளங்களில் இருந்து வரும் கழிவு நீரானது புலிகுத்தி ஆறின் ஊடாக ஓடிக் கடலில் வீணாக கலக்கின்றது. மாகாண நீர்ப்பாசனத் திணைக்களமானது கடந்த ஆண்டு இந்த ஆற்றுக்கு குறுக்கே தற்காலிகமாக மண் சாக்கு அணைகட்டி 300 ஏக்கரில் விவசாயம் செய்ய நீர் வழங்கியது. இங்கு நிரந்தரமான ஓர் அணைக்கட்டை அமைப்பதன் மூலம் அண்ணளவாக 500 ஏக்கர் நிலத்தில் நெற்செய்கை மேற்கொள்ளலாம் என்பதோடு நாட்டின் அரிசி உற்பத்தியினையும் அதிகரிக்கலாம். இந்த திட்டத்தினை செயற்படுத்த ஆவன செய்ய வேண்டும்.
06. பதவியாவில் உள்ள ஜெயந்திவெவ குளத்தில் இருந்து வரும் கழிவு நீரானது வண்ணான்துறை ஆறு, குண்டாறு ஆகியவற்றின் ஊடாக ஓடி கடலில் வீணாகக் கலக்கின்றது. வண்ணான்துறை ஆற்றின் குறுக்கே ஓர் அணைக்கட்டு உள்ளது. இதனை மறுசீரமைத்தால் தென்னமரவடி கிராம சேவையாளர் பிரிவில் உள்ள 300 ஏக்கர் நெற்செய்கைக்கு நீர் வழங்கலாம். இதன் மூலம் அரிசி உற்பத்தியினைப் பெருக்கலாம். இதைச் செயற்படுத்த ஆவன செய்ய வேண்டும்.

07. வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையம் இன்மையால் இங்கு வாழும் மக்கள் எரிபொருள் நிரப்புவதற்கு 20-25கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டியுள்ளது . இச்சிக்கலை தீர்க்கும் பொருட்டாக வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் பொருத்தமான இடத்தில் எரிபொருள் நிரப்பும் நிலையத்தை வெருகல் பிரதேச சபை நிறுவ ஒப்புதல் கிடைக்க ஆவன செய்தல்.
08. வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு வாகனப் புகைப் பரிசோதனை நிலையம் இன்மையால் இங்கு வாழும் மக்கள் வாகனங்களுக்கான புகைப் பரிசோதனை மேற்கொள்வதற்காக 20-25கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டியுள்ளது . இச் சிக்கலை தீர்க்கும் பொருட்டாக வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் பொருத்தமான இடத்தில் வாகனப் புகைப் பரிசோதனை நிலையம் ஒன்றை வெருகல் பிரதேச சபை நிறுவ ஆவன செய்தல்.
09. வெருகல் பிரதேச செயலார் பிரிவில் இடைநிறுத்தப்பட்டுள்ள கல்லரிப்பு வெட்டு வாய்க்கால் வேலைத் திட்டத்தினை மீளத் தொடங்க ஆவன செய்தல்.
10. குச்சவெளிப் பிரதேச செயலாளர் பிரிவுக்கும் பதவிஸ்ரீபுர, கோமரங்கடவெல மற்றும் பட்டணமும் சூழலும் பிரதேச செயலளார் பிரிவுகளின் எல்லைகளுக்கும் இடையே தெளிவின்மை காணப்படுகின்றது . அதேபோல வெருகல் மற்றும் சேருவில பிரதேச செயலக பிரிவுகளின் எல்லைகளுக்கும்; மூதூர் மற்றும் சேருவில பிரதேச செயலக பிரிவுகளின் எல்லைகளுக்கும் இடையே தெளிவின்மை காணப்படுகின்றன. இதனால் தேவையற்ற முரண்பாடுகள் தோன்றுகின்றன. நில அளவைத் திணைக்களத்தின் உதவியுடன் இவற்றைத் தெளிவாக அடையாளப்படுத்த ஆவன செய்தல்.
11. சீதனவெளி ஆடைத் தொழிற்சாலையில் இருந்து பாட்டாளிபுரம் வரையில் RDD க்குச் சொந்தமான வீதி நீண்டகாலமாக பராமரிப்பு இன்றி உள்ளது அதனை மறுசீரமைக்க ஆவன செய்தல் .
மேற்குறிப்பிட்ட முன்மொழிவுகளுக்கான சாத்தியமான தீர்வுகள் அடுத்த ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திற்கு முன்பு வழங்கப்பட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.