இலங்கையில் சிவன் பற்றி பொறிக்கப்பட்டுள்ள பல பிராமிக் கல்வெட்டுகளில் ஒரு சிறப்பு வாய்ந்த, முக்கியமான கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது.
பொலநறுவை மாவட்டத்தில் உள்ள திம்புலாகல எனும் மலைப் பகுதியில் உள்ள அடர்ந்த காட்டின் மத்தியில் இக்கல்வெட்டைத் தேடிச் சென்றேன்.
1600 அடி உயரமான இம்மலையின் வடமேற்குப் பக்க அடிவாரத்தில் இருந்து மலைப்பாறைகளும், அடர்ந்த காடும் நிறைந்த பகுதியின் ஊடாக மலை உச்சிக்குப் போகும் காட்டுப் பாதையில் சுமார் 500 அடி உயரத்தில், அடிவாரத்தில் இருந்து ஒன்றரை கி.மீ தூரத்தில் இக்கல்வெட்டு பொறிக்கப் பட்டுள்ள கற்குகை காணப்படுகிறது.
இயற்கையாக, ஒருபக்கம் உட்குழிவாக அமைந்துள்ள 20 அடி உயரமான பாறையின் மேற்பகுதியில் கற்புருவம் வெட்டப்பட்டு, அதன் கீழே கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இது சுமார் 2300 ஆண்டுகள் பழைவாய்ந்த கல்வெட்டாகும்.
இக்கல்வெட்டில்
“கபதி சிவ குலஹ லேனே சகச”
என பிராமி எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது.
இது வீட்டுரிமையாளன் அல்லது வணிகப் பெருமகன் சிவனின் குலத்தவரின் குகை எனப் பொருள்படுகிறது.
இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள “சிவ குலஹ” என்பது சிவனின் குலத்தவர் அல்லது சிவனைக் குல தெய்வமாக வழிபட்டவர் எனும் பொருளைக் குறிப்பதாகும்.
இக்கல்வெட்டு காணப்படும் கற்குகை 2300 ஆண்டுகளுக்கு முன்பு சிவனின் குலத்தவர் அல்லது சிவனை வழிபட்டவர்கள் பயன்படுத்திய குகையாகும்.
இதன் மூலம் இலங்கையில் 2300 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வாழ்ந்த மக்களால் சிவ வழிபாடு கைக்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிகிறது.
இலங்கையில் சிவன் பற்றிக் குறிப்பிடும் சுமார் 100 பிராமிக் கல்வெட்டுக்களில் இக்கல்வெட்டு ஒன்றே சிவனின் குலம் பற்றிக் கூறுகின்றமையால் இதை முக்கியமான கல்வெட்டாகக் கருதலாம்.
தமிழ் நாட்டில் சிவன் எனக் குறிப்பிடும் பிராமிக் கல்வெட்டு எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திம்புலாகல சிவன் கல்வெட்டைத் தேடிச் சென்ற பயணத்தில் எனக்கு உதவியாக என்னுடன் வந்த திருகோணமலையைச் சேர்ந்த தம்பி கணேசலிங்கம் மற்றும் பொலநறுவையைச் சேர்ந்த தம்பி தனுஷ் ஆகியோருக்கு மிக்க நன்றி.
கலாநிதி. என். கே. எஸ். திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை.

